×

கடந்த அதிமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 18 அவதூறு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் அரசு, முதலமைச்சருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த நேரத்தில் கொடநாட்டில் ஓய்வு எடுத்தது குறித்தும் 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது தொடர்பாகவும், வேறு சில சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை திமுக தலைவரும் அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதேபோல எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது அவருக்கு எதிராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் அவதூறு வழக்குகள், போராட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பான வழக்குகள் என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அவர் 8 வழக்குகளை ஏற்கனவே ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மற்ற 18 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது மு.க.ஸ்டாலி சார்பாக வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியல் ரீதியிலான சாதாரண விமர்சனங்களுக்காக அவதூறு வழக்குகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அவர் முதலமைச்சராக இருந்த போது தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வார் என்றும் ஆனால் அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்துடன் தொடர்ந்து இந்த அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதாகவும் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் மீதான 18 வழக்குகளை ரத்து செய்து நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai High Court ,MK Stalin ,AIADMK , mk stalin
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...